Tuesday, July 18, 2017

ராகு கால வழிபாடு

ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.



சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலேயே, ராகுகாலத்தில் சுப காரியங்களை செய்வது தவிர்க்கப்படுகிறது. அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.

ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1½ மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும், அம்பிகையை "மங்கள சண்டிகையாக" வணங்குவதே காரணம்.

செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன் தரும். துர்க்கையை பார்த்தபடி தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.

வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகு காலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.

அதன்படி செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

Sunday, July 16, 2017

யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வர முடியும்.

*🔵 யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வர முடியும்*



தஞ்சை மாவட்டம்
திருநாகேஸ்வரம் அருகில் தேப்பெருமா நல்லூர்

மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமா நல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.

மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

“”யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வர முடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்” என்று சொல்கிறார் ஆலய குருக்கள் சதீஷ் சிவாச்சாரியார். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி.

நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வை யால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?

சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், “”நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள்.

எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,

“”என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?” என்று கேட்டாள். சனி பகவான், “”நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்” என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, “”ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக் காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மகா மந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத் தைத் தணித்தாள் அம்பிகை. அம்பா ளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். “”ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும்” என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.

இதனைக் கண்ட நாரதர், “”இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!” என்று போற்றிப் புகழ்ந்தார்.

“”பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்” என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, “”மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்” என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், “”பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்” என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, “”மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது” என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், “”மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கி றார்கள்.

இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணி களைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர் திருச்சியைச் சேர்ந்த பக்தர் சிவகுமார் என்பவர்.

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்எபெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.

பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், “”நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்” என்று ஆறுதல் கூறினார்.

அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகி விடுகிறது என்கிறார்கள்.

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.

இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதி யர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத் திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.

கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர்.

இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.

இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.

பூஜைக்குரிய பொருட்களை நாம் வாங்கிச் செல்வது நல்லது. குருக்களின் வீடு அருகிலேயே இருப்பதால் நாம் செல்லும் நேரத்தில் தரிசனம் காணலாம். விரைவில் கும்பாபிஷேகம் காணவிருக்கும் இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.

சிறப்புச் செய்தி

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.

சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர் வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம் போல் அமைக்கப் பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.

Saturday, July 15, 2017

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!



இராமேஸ்வரம் தல வரலாறுராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

22தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்

1. மகாலெட்சுமிதீர்த்தம்

 இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

2. சாவித்திரி தீர்த்தம்,

3. காயத்ரி தீர்த்தம்,

4. சரஸ்வதி தீர்த்தம்

 இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

5. சேது மாதவ தீர்த்தம்

 இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

6. நள தீர்த்தம்

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

7. நீல தீர்த்தம்

 மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

8. கவாய தீர்த்தம்

 இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

9. கவாட்ச தீர்த்தம்

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்குஅருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

10. கந்நமாதன தீர்த்தம்

 சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

11. சங்கு தீர்த்தம்

இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

12. சக்கர தீர்த்தம்

 இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்

இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால்பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்.

14. சூர்ய தீர்த்தம்

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

15. சந்திர தீர்த்தம்

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

16. கங்கா தீர்த்தம்

 17. யமுனா தீர்த்தம்

 18. காயத்ரிதீர்த்தம்

இம்மூன்று தீர்தத்தங்களும்திருக்கோவில் இரண்டாம் பிரகாலத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்குஎதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

19. சாத்யாம்ருத தீர்த்தம்

திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

20. சிவ தீர்த்தம்

இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

21. சர்வ தீர்த்தம்

 இந்ததீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னத முன் உள்ளது. இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

22. கோடி தீர்த்தம்

இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமநானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் , இலுப்பைக்குடி – சிவகங்கை

கொங்கணரின் ஜீவ சமாதி அமைந்த பதி ; ரசவாத வித்தையை கொங்கணருக்கு அருளிய மிக அற்புதமான சிவ பைரவ ஷேத்திரம்..



அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் , இலுப்பைக்குடி – சிவகங்கை

மூலவர் : தான்தோன்றீஸ்வரர் , சுயம்பிராசேஸ்வரர்

அம்மன்/தாயார்: அழகம்மை , சவுந்தர்யநாயகி

தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: பைரவர் தெப்பம்

ஆகமம்/பூஜை : சிவாகமம்

பழமை : 500 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: இலுப்பை வனம்

ஊர்: இலுப்பைக்குடி

திருவிழா:

 சித்திரையில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.

 தல சிறப்பு:

தேவர்கள் அசுரர்களுக்குப் பயந்து இந்த தலத்தில் நல்ல நிம்மதி கிடைக்கவே இங்கு மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனர்.

சிவன் அருளால் பைரவர் தோன்றி அரக்கர்களை அழித்து தேவர்கட்கு நிம்மதியைக் கொடுத்தால் அதாவது தேவர்களின் இளைப்பை ஆற்றினதால் இவ்வூருக்கு இளையாற்றங்குடி என்ற பெயர் வழங்கலாயிற்று.

பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார்.

சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள "குட்டி விநாயகர்' சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு.

சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம்.

அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.

நடை திறப்பு:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

தான்தோன்றீஸ்வரர், சிறிய அளவிலேயே இருக்கிறார்.

அம்பாள் சவுந்தர்ய நாயகி சிலை திருவாசியுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்குள்ள பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் எனப்படுகிறார்.

இரட்டை நாய் வாகன பைரவர் இருப்பது சிறப்பம்சம்.

தல விநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர்.

நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை:

குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமண, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

திருமணத்தடையுள்ள பெண்கள் வாராகிக்கு சந்தனக்காப்பு செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்து விசேஷ பூஜை செய்தும் வேண்டிக் கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்கியவர்கள் பைரவர் சன்னதியில் தேங்காயில் நெய் தீபம் ஏற்றியும், வடை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

தலபெருமை:

இத்தலத்து பைரவர், "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்' என்று பெயர் பெறுகிறார்.

அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.

வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது. பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.

நாய்க்கடி பலகை:🅱

பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட "நாய்க்கடி பலகை' இருக்கிறது.

நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது கொங்கணர் புறப்பாடாகிறார்.

இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால், "இலுப்பைக்குடி' என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

தல வரலாறு:

கும்பாண்டகன் என்னும் அசுரன், இந்திராதி தேவர்களைப் போரிட்டு வென்று தேவலோகத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால், இந்திரன் தனது ராஜ்ஜியத்தை இழந்து, காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி என்னும் வனத்திற்கு வந்தடைந்தான். இங்கே சுயம்புநாதராகிய தான் தோன்றி ஈசரைச் சரணடைந்து வணங்கி, வழிபட்டான்.

பல ஆண்டுகள் மனமுருகி வழிபட்டதால், சுயம்புலிங்க மூர்த்தியிலிருந்து பைரவர் வெளிப்பட்டு கும்பாண்டகனை வதம் செய்தார். வதம் செய்து, இந்திர லோகத்தை மீட்டு இந்திரனுக்குக் கொடுக்கிறார்; பின்னர்,இந்திரனும் இந்திராதி தேவர்களும் வேண்டியதன் பொருட்டு இலுப்பைக்குடியில் தங்கி அருள் பாலித்துவருகிறார். இங்கே பைரவர் தனி சன்னதி கொண்டிருக்கிறார். இங்கு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருபுறமும் நாய் வாகனங்களுடன் உள்ளார்.

இன்னொரு சிறப்பும் இலுப்பைக்குடி பைரவருக்கு உண்டு; இன்றைய வேதியியலின் முன்னோடித்துறையான ரசவாதத்தில் நமது சித்தர்கள் அளவற்ற ஆராய்ச்சிகள் செய்துள்ளனர்; அப்படிப்பட்ட ரசவாத ஆர்வத்தில் கொங்கண சித்தர் ஈடுபட்டிருந்தார். அவருக்கு ரசவாதம் மூலமாக தங்கம் தயாரிக்கும் எண்ணம் இருந்தது.

எனவே,அவர் கன்னியாக்குமரி அருகில் இருக்கும் மருத்துவாழ்மலையில் தவம் செய்து கொண்டிருக்கும் காகபுஜண்டரிடம் மாற்றுக் குறையாத தங்கம் செய்யும் வித்தையைக் கற்றுத்தரும் படி கேட்டார். அதற்கு காகபுஜண்டர் உயர்ந்த மாற்றுத் தங்கம் என்பது சிவன் அருளும் வரம் ! எனவே, தாங்கள் பூர்வஜன்மத்தில் தவமியற்றிய தலம் வடுகநாதபுரிக்கு அருகில் இருக்கிறது , அது இலுப்பைக்காடாகத் தோன்றும், அங்கு தாங்கள் சென்று தவமியற்றினால் சிவன் அருளால் கைகூடும் என்று வழிகாட்டினார்.

அது போன்றே கொங்கணரும் வடுகநாதபுரி என்ற வயிரவன்பட்டிக்குச் சென்றார். அங்கு பல ஆண்டுகள் தவம் செய்து வரும்போது, ஒரு குறிப்பிட்ட தவநிலையை எட்டியதும், சிவன் அவருக்கு காட்சி தந்து, தங்கத்தை ஆயிரம் காரட் உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன் படி கொங்கணர் சிவனரை வழிபட சிவனின் ஒர் சக்தியான  பைரவப் பெருமான் ஒரு ரிஷி வடிவத்தில்  வந்து, கொங்கணருக்கு ரசவாதம் கற்றுக் கொடுத்தார்.

(நாம் பயன்படுத்தும் தங்கம் 24 காரட் தான் தரம் இருக்கும்) பைரவரின் அருளாசியால்,கொங்கணர் 500 காரட் தங்கம் ரசவாதத்தின் மூலமாக செய்திருக்கிறார். கொங்கணருக்கு தங்கத்தின் மீதான ஆசை அதிகரித்து விட்டது. கொங்கணர் பைரவரின் அருளால் உயர்ந்த மாற்றுத்தங்கம் தயாரித்த இடமே இன்று மாத்தூர் என்ற பெயரில் இருக்கிறது. பைரவப் பெருமான் தான் ரிஷி போல வந்திருக்கிறார் என்பதை கொங்கணர் உணரவில்லை; எனவே, பைரவப்பெருமான் திருவருள் புரிய திரு உள்ளம் கொண்டார்.

கொங்கணரிடம் இலுப்பைக்காடு போகலாம் , அங்கு சிறிது நேரம் இளைப்பாறலாம் என்றார். இலுப்பைக்காடு என்ற சொல்லைக் கேட்டதும், அவருக்கு காகபுஜண்டர் கூறியது ஞாபகத்துக்கு வந்தது.

அப்பெயரைக் கேட்ட உடனேயே அவரது மெய் சிலிர்த்தது. கொங்கணருக்கு அந்த கணத்திலேயே  சிவன் லிங்கத் திருமேனியில் சூரியப் பிரகாசத்துடன்(ஜோதி ரூபமாக) பைரவராக  காட்சி கொடுத்தார்.

சிவபெருமானின் காட்சி கிடைத்ததும், கொங்கணருக்கு ஆசைகள் முற்றிலும் அற்றுப்போனது. அவர் தொட்டதெல்லாம் தங்கமாயிற்று. அட்டமாசித்திகள் அனைத்தும் கைகூடியது. நீண்டகால வாழ்க்கையும் மரணமில்லாதப் பெருவாழ்வும் சித்தியாகியது. அவரும் ஜோதி மயமாகி இலுப்பைக்குடியில் ஜீவசமாதியானார்.

தமிழகக் கோவில்களில் இலுப்பைக்குடியில் மட்டுமே கொங்கண சித்தர்,வில்வ விருட்சத்து அடியில் பூஜை செய்யும் விதமான சிற்பம் இருக்கிறது.

இக்கோவிலில் மட்டுமே கொங்கண சித்தரின் படிமம் இருக்கிறது.

பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, "சுயம்பிரகாசேஸ்வரர்' என்றும், "தான்தோன்றீஸ்வரர்' என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இத்தலத்தின் பைரவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயரில் அருள்புரிகிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இத்தல ஈசன் பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, "சுயம்பிரகாசேஸ்வரர்' என்றும், "தான்தோன்றீஸ்வரர்' என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள "குட்டி விநாயகர்' சிற்பம் இருக்கிறது.

சிவன் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை. தேவைப்படும் போது தனது சக்தியின் ஒரு பகுதியை அவதாரமாக அனுப்பி வைப்பார். அப்படி அனுப்பப்பட்ட சக்திகளே ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீசரபேஸ்வரர்.

இவர்களில் மிக உயர்ந்த அவதாரமும் முதல் அவதாரமும் ஸ்ரீகால பைரவப் பெருமானே !!!

இருப்பிடம்:

காரைக்குடியில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டும் பேருந்து உண்டு. 

அத்ரி மலை

மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி மலை

ஆழ்வார்குறிச்சி



அத்ரிமலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம்.

உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் ஒருவர் ‘அத்ரி மகரிஷி’. சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர்.

தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு ‘அத்ரிமலை’ என்றும் பெயருண்டு.

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி தபோவனத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம்.

அத்ரியின் முதன்மை சீடராக விளங்கிய கோரக்கர், பதிணென் சித்தர்களில் ஒருவராவார். இங்குள்ள மலையில் இன்றும் கோரக்கர் உலாவருவதாக நம்பப்படுகிறது. அதனால் ‘கோரக்கர் மலை’ என்றும் இந்த மலை அழைக்கப்படுகிறது. (கோ+இரக்கன் = கோரக்கன். பசுவை போன்ற கருணை உள்ளவன் என்று பொருள்).

அத்ரி-அனுசுயா இருவரும் தவம் இயற்றியபடி வாழ்ந்த இடம், மும்மூர்த்திகளையும் குழந்தையாக தவழச் செய்து, தத்தாத்ரேயரை பெற்ற இடம். பிருகு முனிவர், சிவனையும், சக்தியையும் வழிபட்ட இடம். பதிணென் சித்தர்கள் உள்பட பல சித்தர்களும் பல்வேறு காலங்களில் அத்ரி மகரிஷியிடம் ஆசிபெற்று தங்கிச் சென்ற இடம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது அத்ரி மலை. இந்த மலை ராமாயணம், மகாபாரதத்துடன் தொடர்பு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.



தவத்தில் ஈடு இணையற்றவர் அத்ரி மகரிஷி என்றால், அவரின் துணைவியார் அனுசுயா தவத்திலும், பதிவிரதையிலும் ஒப்பில்லாதவர். இவர்களின் சிறப்புத் தன்மையை உலகுக்கு உணர்த்த இறைவன் சித்தம் கொண்டார்.

அத்ரி கடுமையான தவம் செய்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அனுசுயாவிடம் பிச்சை கேட்டு மும்மூர்த்திகளும், மூன்று துறவி களாக உருமாறி வந்தனர். வந்தவர்களை வரவேற்ற அனுசுயா, மூவரையும் உணவு ஏற்றிட வேண்டினாள். அதற்கு சம்மதித்த துறவிகள், நாங்கள் நிர்வாணமாக இருந்துதான் உணவு ஏற்போம் என்று நிபந்தனை விதித்தனர்.

அத்ரி பரமேஸ்வரர், அத்ரி பரமேஸ்வரி

சரியென்று சம்மதித்த அனுசுயா, தனது பதிவிரத சக்தியால் மும்மூர்த்திகள் மீது தண்ணீரைத் தெளித்து, அவர்களை குழந்தையாக மாற்றினாள். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி மகிழ்ந்தாள்.

அப்போது இருப்பிடம் திரும்பி வந்த அத்ரி மகரிஷி நடந்ததை அறிந்தார். மும்மூர்த்திகளும், குழந்தையாக உருமாறி இருப்பதை பார்த்தார்.

இந்த நிலையில் கணவர்களை தேடி வந்த முப்பெரும் தேவியர்களின் வேண்டுகோளை ஏற்று, குழந்தை களாக இருந்த மூன்று தெய்வங் களையும் மீண்டும் உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அனுசுயாவின் வேண்டுதலை ஏற்று, முப்பெருந் தேவர்களும், முப்பெரும் தேவியரும் அங்கு அமர்ந்து உணவருந்தினர். பின் அவர்களிடம் வேண்டி, முப் பெரும் தேவர்களையும் தன் மகனாகும் வரம்கேட்டுப் பெற்றாள் அனுசுயா. அதன்படி மூவரும் ஓருருவாக தத்தாத்ரேயர் வடிவில் பிறந்தனர் என்பது புராண வரலாறு.



சதுரகிரியில் தங்கியிருந்த கோரக்கரின் மனம், அத்ரி மகரிஷியின் தரிசனம் காண விரும்பியது. இதனையடுத்து அங்கிருந்து அத்ரி மலைக்கு வந்தார். மலையில் கடனா நதிக்கு கீழ் புறம் தங்கியிருந்து தவம் செய்தார். அந்த நேரத்தில் சிவசைலநாதர் அங்கு வந்தார். அவரை அத்ரி மக ரிஷி என்று நினைத்து வணங்கினார் கோரக்கர். ஆனால் சிவசைலநாதர், கோரக்கருக்கு அத்ரி மகரிஷியை காட்டி அருளினார்.

குருபக்தியில் சிறந்து விளங்கிய கோரக்கர், அத்ரியின் பிரதான சீடரானார். ஒரு சமயம் பூஜைக்கான மலர்களை பறிப்பதற்காக வனத்திற்குள் சென்றார் கோரக்கர். அப்போது அத்ரி தபோவனத்தில் இருந்து கிழக்கே சிவசைலத்தில் எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் சிவனை தரிசித்தார். தான் கண்ட காட்சியை குருநாதர் அத்ரியிடம் கூறினார். அத்ரி மகரிஷியும், பரமேஸ்வரனை அங்கேயே வேண்டி எழுந்தருள செய்து வழிபட்டார். அத்ரியால் வந்ததால் இறைவன் ‘அத்ரி பரமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘அத்ரி பரமேஸ்வரி’ என்றும் அழைக்கப்பட்டனர். கோரக்கர் விருப்பத்தில் வந்ததால் இந்த ஆலயம் ‘கோரக்கநாதர் ஆலயம்’ என்று பெயர் பெற்றது.

பிருகு முனிவர் ஒருமுறை இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்தார். அத்தருணம் சிவன் தோன்றி, தம்முடன் சக்தியையும் சேர்த்து பிரார்த்தித்து தவம் செய்யுமாறு கூறினார். அதன்படியே பிருகு முனிவர் தவம் செய்தார். 8 பட்டை வடிவ லிங்க திருமேனியுடன் சக்தி காட்சி அளித்தாள். சிவனும், சக்தியும் ஒரே சன்னிதியில் லிங்க வடிவில் காட்சி தருவது அத்ரி மலையில் மட்டுமே. சக்தி லிங்கத்தில் எட்டு பட்டை வடிவுடன் சூலம் காணப்படும். 8 பட்டைகள், அஷ்டமா சித்திகளை குறிப்பதாகும்.

இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, சுற்றுப்பாதையில் அகத்தியர், அத்ரி, நாக தேவதைகள், சாஸ்தா பீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரியும், எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர். கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.

மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கடைசி வெள்ளி மற்றும் தமிழ் வருடப்பிறப்பாகிய சித்திரை முதல்நாள், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும். செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர். இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ராகு-கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.



அத்ரி கங்கை தீர்த்தகுளம்

சாம்பலில் இருந்து பிறந்த கோரக்கர்:

அத்ரி மகரிஷியின் பிரதான சீடர், கோரக்கர். சித்தர்களின் வரிசையில், பிறப்பிலேயே விசேஷத் தன்மை கொண்டவர் இவர். விபூதி என்றால் ‘சாம்பல்’ என்றும், ‘ஞானம்’ என்றும் பொருள் உண்டு. சிவ ஞானத்துடன் பிறந்தவர் மச்சேந்திரர். இவர் கடும் தவம் செய்து சித்தரானார். மச்சமுனி என்று அழைக்கப்பட்டார்.

மச்சமுனி ஒருநாள் பிச்சை கேட்டு ஒரு வீட்டின் முன்பு வந்து நின்றார். அந்த வீட்டுப் பெண், மச்ச முனிக்கு பிச்சையிட்டாள். அப்போது அவளது முகம், அவளுக்கு ஏதோ மனக்குறை இருப்பதை உணர்த்தியது.

அதைக் கண்ட மச்சேந்திரர், ‘உனக்கு துன்பம் யாது?’ என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண், தனக்கு மகப்பேறு இல்லாததைக் கூறி வருந்தினாள். இரக்கம் கொண்ட மச்சேந்திரர், சிறிது திருநீற்றை அள்ளி அவளிடம் கொடுத்தார். ‘இந்த திருநீற்றை, சிவநாமம் கூறி உண்பாயானால், உனக்கு பிள்ளைப்பேறு உண்டாகும். அந்த பாலகனை காண நிச்சயம் ஒருநாள் வருவேன்’ என்று கூறி அங்கிருந்து சென்றார்.

மச்சமுனி சென்றதும், அந்தப் பெண் பக்கத்து வீட்டுக்காரியிடம் நடந்த சம்பவத்தைக் கூறினாள். பக்கத்து வீட்டுப்பெண்ணோ, ‘உன்னிடம் பிச்சை வாங்கி சென்றவர் மாயாவியாக இருக்கலாம். விபூதியை கொடுத்து உன்னை மயக்கி அடையலாம். எனவே அந்த விபூதியை சாப்பிடாதே’ என்று கூறினாள்.

பயந்து போன அந்தப் பெண், மச்சமுனி கொடுத்து விட்டு சென்ற விபூதியை அடுப்பில் போட்டாள். ஆண்டுகள் சில சென்றன. திருநீறு கொடுத்த மச்சேந்திரர் மீண்டும் அந்தப் பெண்ணை வந்து சந்தித்தார். ‘திருநீற்றால் பிறந்த பாலகன் எங்கே? அவனை நான் பார்க்க வேண்டும்’ என்று கேட்டார். மச்சமுனியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அந்தப் பெண், முடிவில் நடந்த அனைத்தையும் கூறினாள்.

பின்னர், ‘சிவ சித்தர்தானே? அடுப்பில் போட்ட சாம்பலில் இருந்தும் குழந்தையை உருவாக்கலாமே?’ என்று சந்தேகக் கண்கொண்டு கேள்வியை எழுப்பினாள்.

அவளது கேள்வியால் கோபம் கொண்ட மச்சமுனி ‘அடுப்பு சாம்பல் எங்கே?’ என்றார்.

‘கோபத்தில் குப்பை மேட்டில்தான் கொட்டினேன்’ என்றாள் அந்தப் பெண்.

உடனே மச்சேந்திரர், ‘குழந்தை உன் கருப்பைக்குள் வளர உன் கர்மா இடம் கொடுக்கவில்லை. ஆனால் கோசலையாகிய இது, அதற்கு இடம் கொடுத்து விட்டது. நான் சிவசித்தன் என்பது சத்தியமானால் இந்த கோவகம், ஒரு கோவகனைத் தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல.. கோரக்கனும்கூட. கோவாகிய பசுவின் இரக்கம் இவனிடம் இருக்கப்போவது சத்தியம். கோரக்கனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்தார்.

கோரக்கனும் அந்த குப்பை மேட்டில் கொட்டிய சாம்பலில் இருந்து வெளிவந்தார். திருநீறு கொடுத்த காலம் முதல் அப்போது வரை என்ன வளர்ச்சியோடு இருக்க வேண்டுமோ அதே வளர்ச்சியோடு இருந்தான் அந்த பாலகன். அவரே கோரக்கர்.

மச்சமுனி, சாம்பலில் இருந்து வந்த பாலகனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் சிறுவன் கோரக்கனோ, தாயிடம் போகாமல், மச்சேந்திரநாதரை பின் தொடர்ந்தான். கோரக்கரும் பெரிய சித்தராகி குருவை மிஞ்சும் சீடராக விளங்கினார். அதன்பிறகே அவர் அத்ரி மகரிஷியை சந்தித்தார்.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வனத்துறையினரின் அனுமதி உண்டு.