Friday, September 1, 2017

குரு பகவானுக்குரிய ஆலயங்கள்..

குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.


குருப் பெயர்ச்சியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், மனிதர்களின் பொருளாதார வாழ்வில் ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்தி உலக பொருளாதாரத்தையே, முழு கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான்.

வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள குரு பெயர்ச்சி அன்று வழிப்பட வேண்டிய குரு தலங்கள் சிலவற்றை காணலாம்.

திருச்செந்தூர்:

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் திருத்தலம், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம் இது.

தென்குடி திட்டை:

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள குரு, ராஜயோக குருவாக தனிச்சன்னிதியில் காட்சி அளிக்கிறார்.

பட்டமங்கலம்:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில், குரு பகவான் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த கோலத்தோடு காட்சி தருகிறார்.

தக்கோலம் :

அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி கலைநயத்தோடு காணப்படுகிறார்.

ஆலங்குடி :

குருபகவானுக்குரிய விஷேசத் தலமாக ஆலங்குடி விளங்குகிறது. வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிவித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.

மயிலாடுதுறை :

இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயுரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோவிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.

கும்பகோணம்

கும்பகோணத்தில், கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

அயப்பாக்கம் :

சென்னை அயப்பாக்கத்தில் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தி. குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்கள் அனுபவம்.

குச்சனூர் :

தேனி மாவட்டம் குச்சனூரில் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

திருவொற்றியுர் :

சென்னை திருவொற்றியு ர் வடிவுடையம்மன் கோவிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோவில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல அமைந்துள்ளது.

இன்னும் தமிழகத்தின் பல இடங்களிலும் குருபகவான் அருள்பாலிக்கிறார். அனைத்து ஊர்களிலும் உள்ள சிவாலயங்களிலும் நவக்கிரகத்தில் குரு பகவான் வீற்றிருப்பார்.
 தட்சிணாமூர்த்தியாகவும்  தனி சன்னிதியில் வீற்றிருப்பார்.

Wednesday, August 30, 2017

'மயிலையே கயிலை; கயிலையே மயிலை'

புகழ் பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் அருகே,6 பழமையான ,அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.



இவை அனைத்தும் மைலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும்.

🌹கபாலீஸ்வரரும் ஆறு சிவாலயங்களும்...

🌹
மயிலாப்பூர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது, அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்தான். ஆனால், கபாலீஸ்வரர் கோயிலை வழிபடுவதற்கு முன்பாக, மற்ற ஆறு கோயில்களையும் தரிசித்து வழிபட்ட பிறகுதான், நிறைவாக கபாலீஸ்வரர் கோயிலை தரிசித்து வழிபடவேண்டும். ஒரே நாளில் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்பதற்கான வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த வழிமுறைகள் இங்கே...

சப்த சிவஸ்தலங்கள்:
1.ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில்
2.ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில், 3.ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில், 4.ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில், 
5.ஶ்ரீவாலீஸ்வரர் கோயில்,
6.ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில், 
7.ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில். 

இந்த ஏழு கோயில்களுமே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஶ்ரீராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த முறையிலேயே நாமும் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்போம்.

காரணீஸ்வரர்
1) ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில்:
இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

12 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஶ்ரீகாரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார். அம்பிகை ஶ்ரீசொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தீர்த்தபாலீஸ்வரர்
2) ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில்:
மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும்.

வெள்ளீஸ்வரர்
3) ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில்:
மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகா விஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.

வழிபடும் முறை:
வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக தலவரலாறு. எனவே, ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். வெள்ளீஸ்வரரை 'கண் டாக்டர்' என்றே கொண்டாடுகிறார்கள்.

விருபாக்ஷீஸ்வரர்
4) ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில்:
மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் நான்காவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சந்நிதியும் சூரியனார் சந்நிதியும் அம்பாளின் சந்நிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது.

வாலீஸ்வரர்
5) ஶ்ரீவாலீஸ்வரர் கோயில்:
‘மயிலாப்பூரின் காவல் தெய்வம்' என்றுகூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஶ்ரீவாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஶ்ரீபெரியநாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால்தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். 5-வதாக வழிபடவேண்டிய கோயில் இது.

மல்லீஸ்வரர்
6. ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில்:
மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 6-வதாக வழிபடவேண்டிய ஆலயம் இது.

கபாலீஸ்வரர்
7. ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில்:
மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் நிறைவாக தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர்.

புன்னை மரத்தினடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. மயிலையின் சப்த சிவஸ்தலங்களில் 7-வதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்.

இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், 'மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற சிறப்பைப் பெற்றது போலும்.

மயிலையே கயிலை,ஓம் நமச்சிவாய.

Tuesday, August 29, 2017

உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில்..

உத்தரகோசமங்கை- வாழ்வில் ஒருமுறையாவது
சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம்..!

உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் என போற்றி புகழப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை.

ஆண்டவனின் அடி முடி எப்படி அறிய முடியாததோ அப்படித்தான் இந்தக் கோவிலின் பெருமையும், சிறப்பும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி,
காசியில் இறந்தால் முக்தி.
அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள். இங்கே உத்தர கோச மங்கை மண்ணை மிதித்தாலே முக்தி.

ஆர் அறிவார்
எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இவர் அகலமும் நீளமும்
பேர் அறியாத பெருஞ் சுடர் ஒன்று அதன்
வேர் அறியாமல் விளம்பு கின்றேனே…

இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.
உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

இங்கு மூன்று மூர்த்தங்கள்
மங்களேச்சுவரர், மங்களேசுவரி, ஆடல்வல்லான், மூர்த்தியும் இங்கே ( நடராசர்) மரகதப் பச்சை , தீர்த்தமும் இங்கே பச்சை,
விருட்சமும் இங்கே பச்சை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.

கோவிலின் தொன்மை நம்மை வியக்க வைக்கிறது….

மகா பாரதப் போர் 5100 ஆண்டுகளுக்கு
முன்பு நிகழ்ந்தது. (கிமு 3100) அப்போதுதான் பரீஷீத்து மகராசன் காலத்தில் கலிகாலம் பிறந்தது. அந்தக் காலத்தில் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

அதற்கும் முந்தியது இராமாயணக் காலம்
இலங்கேசுவரன் இராவணன் இங்கே வந்து வணங்கிச் சென்றிருக்கிறான்.. இங்குள்ள மங்களேச்சுவரர் மண்டோதரிக்கு அருளியவர்.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்

மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

இங்குள்ள அர்ச்சகர் கூற்றுப் படி
இராவணனுக்கும், மண்டோதரிக்கும் நடந்த திருமணமே மங்களேச்சுவரர் சன்னதியில் தான் நடந்ததாம். மங்களேச்சுவரரே அதை முன்னின்று நடத்தியதாகவும் நம்பப் படுகிறது.

இராவணனைப் போல சிவ பக்தனைப் பார்க்கவே முடியாது. இந்த ஊர் மங்களேசுவர ராகிய சிவ பெருமான் இராவணன் கையில் பால சிவனாகத் தவழ்ந்த கதையும் ஒன்று உண்டு. ஆக அவன் காலத்திலும் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

வலை வீசி விளையாண்ட படலம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று கேட்பதை விட
ஏ.பி.நாகராசனின் திருவிளையாடல் சினிமாப் படம் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் உங்களுக்கு நன்றாக விளங்கும். அதில் வரும் கடைசிக் கதைதான் இந்த வலைவீசி விளையாண்ட படலம்.

அது நிகழ்ந்த இடம் வேறெங்கும் இல்லை…
இங்கே தான்...

 இங்கே இப்போது கோவில் வாசல் உள்ள இடத்தில்தான கடல் இருந்தது. இப்போது அதே கடல் பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்க்கம் போய்விட்டது
இங்குதான் சிவபெருமான் வலைவாணனாக உருவெடுத்து வந்து சுறாவை அடக்கினார்.
அவர் மணந்த கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி…

 இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்மன். அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டினார். பிரணவ மந்திரத்தின் பெருளை உபதேசமும் செய்தார். உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம் உத்தர கோசமங்கை ஆனது.

இதுதான் கோவில் உருவான வரலாறு.

கோவில் அமைப்பு

முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது. மேலும் பொதுவாக எந்தச் சிவாலயங்களிலும் பூக்களைச் சார்த்தி வழிபடும் போது சாபம் பெற்ற ஒரு பூவை மட்டும் ஒதுக்கி விடுவார்கள்…

அதுதான் தாழம் பூ.

நான் முகன் முடி கண்டதாய் பொய் சொன்ன அதே பூ, நான் முகனுக்கு வழிபாடு அற்றுப் போனது போல் சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் உரிமையை இழந்த அதே பூ இங்கு மட்டும் தாழம் பூ சாத்தும் வழக்கம் அற்றுப் போகமல் இன்றும் தொடர்கிறது,
பொய் உரைத்தோர்களையும் மங்களேச்சுவரர் மன்னிப்பார் என்பதைக் காட்ட மட்டும் அல்ல,
பிரமனும் பெருமாளும் அடி முடி தேடியது எந்த யுகம் அதற்கும் முன்னே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என அதன் தொன்மையை காட்டவும்தான். இடதுபுறம் உள்ள கோபுரம். மொட்டையாக காணப்படுகிறது.

நடராசருக்கு வருடம் ஒரு முறை மட்டுமே இங்கு அபிஷேகம் செய்யப்படும்.அன்று மட்டும் அவரைக்களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம். அதுதான் மார்கழித் திங்கள் அன்று வரும் திருவாதிரை மீதி நாட்களில் பூரா அவர் சந்தனக் காப்பிட்ட கோலத்தில் தான் இருப்பார். மார்கழி மாத திருவாதிரை க்கு முதல் நாள் பழைய சந்தனம் களையப் படும். 32 வகை அபிஷேகங்கள் அதி அமர்க்களமாக நடக்கும். அன்று இரவே புதிய சந்தனம் சாத்தப் படும்.

ஆண்டு முழுக்க ஆடல் வல்லான் திரு மேனியில் அப்பி இருந்த சந்தனம். களையப் பட்ட பின் அதைப் பெற பக்தர்களிடம் ஆவலும் போட்டாப் போட்டியும் அதிகம். எங்கும் போலவே இங்கும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்…! இந்தச் சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது. அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது என பக்தர்கள் நம்புகின்றார்கள்.

பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.

ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

இத்தலத்திற்கு எப்படி செல்வது....
மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

சிவாய நம!!

Tuesday, August 22, 2017

நவக்கிரக ஸ்தலங்கள்

ஒப்புக்கொள்ளப்பட்ட -நவகிரக ஸ்தலங்கள்: ..........


நவகிரகங்களுக்குறிய வழிபாட்டு தலங்கள்,பல புராணங்களில் பலவாகச் சொல்லப்பட்டபோதிலும்,பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலங்கள் பின்வருமாறு.

1.சூரியன்-சூரியனார்கோயில்
2.சந்திரன்-திருப்பதி
3.செவ்வாய்-பழனி
4.புதன்-மதுரை
5.வியாழன்-திருச்செந்தூர்
6.சுக்கிரன்-ஸ்ரீரங்கம்
7.சனி-திருநள்ளார்
8.ராகு}
9.கேது}காளஹஸ்தி

இக்காலத்தில் இம்முறை மாறிவிட்டது.இன்று நாம் செல்லும் யாத்திரை பின்வருமாறு,

1.சூரியன்-சூரியனார்கோயில்
2.சந்திரன்-திங்களூர்
3.செவ்வாய்-வைத்தீஸ்வரன் கோயில்
4.புதன்-திருவெண்காடு
5.வியாழன்-ஆலங்குடி
6.சுக்கிரன்-கஞ்சனூர்
7.சனி-திருநள்ளார்
8.ராகு-திருநாகேஸ்வரம்
9.கேது-கீழ்ப்பெரும்பள்ளம்

சூரியன்,சனி நீங்கலாக மற்ற கிரகங்களுக்குரிய தலங்கள் மாறியுள்ளன.இவற்றுள் வைத்தீஸ்வரன் கோயில்,திருவெண்காடு,ஆலங்குடி,கஞ்சனூர்,திருநாகேஸ்வரம் முதலியவை பாடல்பெற்ற சிவத்தலங்கள்.ஆனால் இவை இன்று நவகிரக ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.இது கால வேறுபாட்டால் நேர்ந்த விளைவு.கோயில் விளம்பரங்கள் அவற்றை நவகிரக கோயில்களாகவே மாற்றியுள்ளன.
இக்கோயில்களில் நவகிரகச் சன்னிதிகள் பழமையாக அமைந்துள்ளபோதிலும்.அந்தந்த கிரகத்துக்குரிய சந்நிதிகள் தனியாக அமைந்தும் பிற்காலத்தில் அமைக்கப்பட்டும் உள்ளன.கோஷ்ட மூர்த்தியாகிய தக்ஷிணாமூர்த்தி,தனிச்சன்னிதியாக மாற்றப்பட்டுள்ளது!

Monday, August 21, 2017

விநாயகர் சதுர்த்தி!!

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து,
அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும்.


மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும்.

பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம்.

காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும்படியாக 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம்.

ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.

Saturday, August 19, 2017

சனி மகாபிரதோஷம்!!

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.


பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.

பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.

பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.

நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.


நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.

சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். இங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்று கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம்.

பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.

மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.

பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.

பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.

சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.

ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள். நாளைய தினம் சனி மகாபிரதோஷம் வருகிறது. அன்பர்கள் ஆலயம் சென்று ஈசனை தரிசித்து அருள்பெற வேண்டுகிறோம்.

Thursday, August 17, 2017

சுவாமிமலை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கிறோம். இதன் காரணமாகவே இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படலாயிற்று.

அமைவிடம் :

தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் நகரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்திருப்பது சுவாமி மலை. இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலில், திருமண மண்டபங்களும் வசதியான தங்கும் விடுதிகளும் உள்ளன. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தங்கிக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் ஏராளமான குடில்களும் உள்ளன.
சோழ நாட்டையே ஒரு சிவத்தலமாகப் பாவித்து வழிபடும் முறை உண்டு. அந்த வகையில் திருவலஞ்சுழியை விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலையை முருகன் சன்னதியாகவும் கொள்வர். இத்தலத்தை முருகனின் சிறப்புமிக்க அழகிய படைவீடு என்ற பொருளில் (ஏர்+அகம்) ஏரகம் என்றனர். ஏர்த் தொழிலான விவசாயத்தில் சிறந்த பகுதியில் உள்ள அகம் என்ற பொருளையும் எடுத்துக் கொள்ளலாம். இக்கோயிலின் தல வரலாறு சுவாமிமலையில் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

பிரணவ உபதேசம் கேட்ட சிவபெருமான்:

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன், முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.
ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதால், பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், “பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?” என்று முருகனிடம் கேட்டார். “ஓ நன்றாகத் தெரியுமே” என்றார் முருகன். “அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?” என்றார் ஈசன். “உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!” என்றார் முருகன்.
அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்பட்டார். இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்பட்டது.

நான்கரை அடி உயர சுவாமிநாதன் :

ஞானாசிரியராகிய சுவாமிநாதன் கம்பீரமாக நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலக்கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடக்கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்கக் கருணாமூர்த்தியாகக் காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதைக் கண்குளிரக் காணலாம்.
மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, இரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி அடியவர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.
நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் “தாத்ரி” என்பர். அதனால் சுவாமிமலையை “தாத்ரிகிரி” என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை “ஞானஸ்கந்தன்” என்று போற்றுகின்றனர்.

முருகனை போற்றிப் பாடல்கள் :

அருணகிரிநாதர் முப்பத்தெட்டு திருப்புகழ்ப் பாடல்களை சுவாமிநாதனுக்குச் சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். “ஒருதரம் சரவணபவா…” என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது.
அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, “சுவாமிநாத பரிபாலயாதுமாம்” என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

மாடக்கோயில் :

சுவாமிமலை இயற்கையான மலை அன்று. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோயில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோயில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும்.
இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதற் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.
தெற்கு நோக்கிய இராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோயிலுக்குள் நுழைகின்றனர். ஏனெனில், நுழைந்தவுடன் வல்லப கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.
மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.
மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் “கண் கொடுத்த கணபதி” என்று பெயர்.  இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை அருளி வருகிறார்.

Wednesday, August 16, 2017

பேசிக்கொள்ளும் சிலைகள்!

இந்தியாவில் உள்ள கோவில்கள் பலவற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் பீகாரில் உள்ள ஒரு கோவிலில் தெய்வத்தின் சிலைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அதிசயத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.



பீகாரில் உள்ள பாஸ்டர் என்னும் நகரத்தில் உள்ளது ராஜ ராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோவில். கிட்டதட்ட 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் தாந்ரிகங்களுக்கு பேர்போனது. இந்த கோவில்  காளி, தூமாவதி, பகுளாமுகி, புவனேஸ்வரி என 11 அவதாரங்களில் துர்கை அம்மன் காட்சி தருகிறார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும் இந்த கோவிலில், இரவு நேரங்களில் பலவிதமான அமானுஷ்ய குரல்கள் வருவதை பக்தர்கள் அவ்வப்போது கேட்டுள்ளனர்.

இந்த மர்மகுரல்கள் கருவறைக்கு வெளியில் இருந்து வருவதாகவும் அதனால் கருவறைக்கு வெளியில் இருக்கும் தெய்வங்களான பகுளாமுகி, தாரா, படுக பைரவர், தாத்தாத்ரேய பைரவர், அன்னபூர்ண பைரவர், கால பைரவர், மாங்காண்டி பைரவர் போன்ற தெய்வங்களின் சிலைகள் ஒன்றோடொன்று பேசிக்கொள்வதாக நம்பப்படுகிறது.

தந்திரங்களுக்கும் அமானுஷ்யங்களுக்கும் பேர்போன இந்த கோவிலில் இப்படி ஒரு அதிசயம் நிகழ்வது எப்படி என்று யாராலும் அறியமுடியவில்லை. அதோடு உக்கிர தெய்வங்கள் பல உள்ளே இருப்பதால், இரவு நேரத்தில் இதுபோன்ற அமானுஷ்யங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது என பலரும் ஆணித்தரமாக நம்புகின்றனர்.





Sunday, August 13, 2017

தமிழத்தில் இருக்கும் பெரிய கோவில்கள்

உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில் 12 கோவில்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன..


உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில் 12 கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன :

எவ்வளவு சந்தோசமான விஷயம்,பார்த்து விட்டு ஷேர் செய்யுங்கள் :

1.அங்கோர் வாட்,கம்போடியா,ஆசியா

2.ஸ்ரீ ரங்காநாதசுவாமி
 கோவில்,ஸ்ரீரங்கம்,திருச்சி, தமிழ்நாடு

3.அக்ஷர்தம் கோவில்,டெல்லி

4.பேலூர் மடம்ராமகிருஷ்ண கோவில்,மேற்கு வங்காளம்.

5.தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்,தமிழ்நாடு

6.பிரம்பணன், திருமூர்த்தி கோவில்,இந்தோனேசியா.

7.பிரஹதீஸ்வரர் கோவில்,தஞ்சாவூர்,தமிழ்நாடு

8.அண்ணாமலையார் கோவில்,திருவண்ணாமலை, தமிழ்நாடு

9.ராஜகோபால சுவாமி,கோவில்,மன்னார்குடி, தமிழ்நாடு

10.ஏகாம்பரேஸ்வரர் கோவில்,காஞ்சிபுரம்,தமிழ்நாடு

11. ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்,காஞ்சிபுரம், தமிழ்நாடு

12.தியாகராஜேஸ்வரர் கோவில்,திருவாரூர்,தமிழ்நாடு

13.ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல், திருச்சி,தமிழ்நாடு

14.நெல்லையப்பர் கோவில்,திருநெல்வேலி,தமிழ்நாடு

15.மீனாக்ஷி அம்மன் கோவில்,மதுரை ,தமிழ்நாடு

16.வைத்தீஸ்வரன் கோவில்,தமிழ்நாடு

17.ஜகன்னாதர் கோவில்,பூரி,ஓடிஷா

18.பிர்லா மந்திர் லக்ஷ்மிநாராயண் கோவில்,நியூ டெல்லி

Saturday, August 12, 2017

நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்கள்...

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.



அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

1. காந்திமதி நெல்லையப்பர் கோவில்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்

இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

2. சபை சிவாலயங்கள்:

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* சித்ர சபை - திருக்குற்றாலம்

* தாமிர சபை- திருநெல்வேலி

3. முப்பீட தலங்கள்:

* அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்

* ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்

* வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

4. பஞ்ச ஆசன தலங்கள்:

* ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்

* களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்

* நான்குநேரி - திருநாகேஷ்வரர்
திருக்கோயில்

* விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்

* செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்

* தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்

* சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)

* கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்

* தாருகாபுரம் - நீர் தலம்

* தென்மலை- காற்று தலம்

* தேவதானம் - ஆகாய தலம்

5. காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்:

* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்

* ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்

* கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்

* திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்

* பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

6. இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்:

* களக்காடு- சத்யவாகீசர்
* பத்தை - குலசேகரநாதம்
* பதுமனேரி - நெல்லையப்பர்
* தேவநல்லூர் - சோமநாதம்
* சிங்கிகுளம் - கைலாசநாதம்

7. நவ சமுத்திர தலங்கள்:

* அம்பாசமுத்திரம்
* ரவணசமுத்திரம்
* வீராசமுத்திரம்
* அரங்கசமுத்திரம்
* தளபதிசமுத்திரம்
* வாலசமுத்திரம்
* கோபாலசமுத்திரம்
* வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
* ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

8. பஞ்ச பீட தலங்கள்:

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

* கூர்ம பீடம் - பிரம்மதேசம்
* சக்ர பீடம் - குற்றாலம்
* பத்ம பீடம் - தென்காசி
* காந்தி பீடம் - திருநெல்வேலி
* குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

9. சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்):

* பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
* அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
* திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
* கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
* முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
* தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)
* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
* வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
* கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்
* சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்
* மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
* ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
* தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்
* அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்
* காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)

10. வாலி வழிபட்டத் தலங்கள்:

* திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்

* நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்
* பாபநாசம் - சூரியன்
* சேரன்மகாதேவி - சந்திரன்
* கோடகநல்லூர் - செவ்வாய்
* குன்னத்தூர் - இராகு
* முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

11. வேறு சில ஆலயங்கள்:

* இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

* நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.

* நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.

* சங்கரன்கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.

Friday, August 11, 2017

சங்கடங்கள் தீர்க்கும் சதுர்த்தி விரதம்!!

விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, விநாயக சஷ்டி போன்ற விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம்.


இந்துக்கள் யாவரும் விரும்பி அனுஷ்டிக்கும் விரதம். விநாயகர் ஆலயங்களில் சிறப்பாகவும், ஏனைய ஆலயங்களில் பொதுவாகவும் இவ் விரதநாளிலே விசேஷ அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நிகழ்கின்றன. எனினும் இவ்விரதத்தினைப் பூஜை வழிபாடுகளுடன் இல்லங்களிலும் கைக்கொள்வது நன்று.

சூரியன் சிங்கராசியில் இருக்கும் போது, அதற்குரிய ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் ஓங்காரத் தெய்வ வணக்கம் சிறப்பாக அத்திங்களில் எல்லோராலும் நடத்தப் பெற்று வழக்கத்தில் வந்ததுள்ளது.

கஷ்டங்கள் நீங்கிச் சுகமாக வாழ
விநாயகருக்கு அறுகும், வன்னிப் பத்திரங்களும், மந்தாரைப் பூவும் மிகச் சிறந்தவை. புட்ப விதியிலே சதுர்த்தி விரத காலத்தில் விநாயகரை அர்ச்சிக்க வேண்டிய பத்திரங்களாக பாசிப்பச்சை, கையாந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்தரி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, விஷ்ணுகரந்தை, மாதுளை, தேவதாரு, மருது, நெல்லி, சிறுசண்பகம், செந்தாளி, பாதிரி என்பவற்றையும் கூறுகின்றது. சதுர்த்தியில் அறுகுக்கு முதலிடம் தரப்படுகின்றது.

கந்தபுராணத்தில் சிறப்பித்துக் கூறப்படும் இந்த விரதமானது சூதமுனிவரால் பஞ்சபாண்டவருக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையை உடையது. துரியோதனனாதி கௌரவர்களின் கொடுமையினால் பாண்டவர்கள் வனவாசம் செய்ய நேர்கிறது. காட்டிலே மிகுந்த கஷ்டமும் மனவேதனையும் அடைந்திருக்கும் நிலையில் சூதமுனிவரை ஒருநாள் சந்திக்கின்றார்கள்.

அப்போது தருமர் தமது கஷ்டங்கள் நீங்கிச் சுகமாக வாழ வழிகேட்கிறார். அதற்கு வழியாக இந்த விநாயக சதுர்த்தி விரதத்தை உபதேசிக்கிறார் சூதமுனிவர். அது மட்டுமல்லாமல் இந்த விரதத்தை முன்பு அனுஷ்டித்துப் பயன்பெற்றவர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறார். தமயந்தி நளனை மீண்டும் அடைந்ததும், கிருஷ்ணர் ஜாம்பவதியையும் சியமந்தகமணியையும் பெற்றுக்கொண்டதும், இராமன் சீதையை மீட்டதும், இந்திரன் அசுரப்பகையை வென்றதும், பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததும் இந்த விரத மகிமையினால்தான் என்று விளக்கினார்.

இதனைக்கேட்ட பாண்டவரும் முறைப்படி விநாயக விரதத்தைக் காட்டிலேயே அனுஷ்டித்து உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர். இஷ்ட சித்திகளைப் பெற, நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.

அதிகாலை துயிலெழுந்து நீராடி நித்திய கர்மாெனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபடவேண்டும். மத்தியானம் ஒரு பொழுது உண்ணலாம்.

 நல்லெண்ணெய் சேர்க்கக்கூடாது என்பது விதி. இரவு பட்டினி இருக்க முடியாதவர்கள் பால்பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.

வீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் விரிவாக இந்த விரதமிருக்க விரும்புவோர் வீட்டிற்கு ஈசான திக்கில் பசும்சாணியால் மெழுகித் தூய்மையாக்கப்பட்டு வெள்ளைகட்டித் தயார் செய்யப்பட்ட ஓரிடத்தில் அல்லது பூஜை அறையிலே மாவிலைத்தோரணங்களாலும் சிறிய வாழைமரம் முதலியவற்றாலும் அலங்கரித்து அங்கு ஐந்து கும்பங்களை முறைப்படி ஸ்தாபித்து சித்த கணபதி, வித்தியா கணபதி, மோஷ கணபதி, மஹா கணபதி ஆகிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பூஜைகளை நடத்தலாம்.

விசேஷ நிவேதனங்களாக அறுசுவை உணவும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் சொல்லப்பட்டிருக்கின்றன. நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத்துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை ஒவ்வொன்றிலும் இருபத்தொன்று என்ற எண்ணிக்கையில் படைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
(வெள்ளரிப்பழத்தை இருபத்தொரு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம்)

மாத சதுர்த்தி விரதம்:
மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களும் விநாயகருக்குரிய விரத நாட்களே. சதுர்த்தி விரதம் எனப்படும் இந்த நாட்களிலும் விரதமிருப்பது மிக விசேஷமானதாகும். அவ்வாறு அனுஷ்டிக்க முடியாதவர்கள் விநாயக சதுர்த்தி எனப்படும் ஆவணிச் சதுர்த்தி நாளில் விரதமிருக்கலாம்.

சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன?

மாதந்தோறும் விரதமிருக்க விரும்புவோர் ஆவணிச் சதுர்த்தியிலே பூஜை வழிபாடுகளுடன் சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து (இந்தக் காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள்வேன் என்று சங்கல்பம் பூண்டு) முறைப்படி தவறாமல் தொடர்ந்து கைக்கொள்ளவேண்டும். இருபத்தொரு வருடம் விரதமிருப்பது நன்று. இயலாதெனின் ஏழுவருடங்கள் அனுஷ்டிக்கலாம். அல்லது இருபத்தொன்றுக்குக் குறையாமல் மாத சதுர்த்தி விரதமிருந்து அதையடுத்துவரும் ஆவணிச் சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.

விரத உத்தியாபனம்:
குறிப்பிட்ட கால எல்லை முடிந்ததும் அதாவது தாம் கைக்கொள்வதாகக் கருதிய வருடம் நிறைவு பெற்றதும் முறைப்படி விரதத்தை முடித்து, விரதபலனைத் தருமாறு வேண்டுதல் செய்தலே விரதோத்யாபனமாகும்.

விரத உத்யாபன சமயத்தில் பூஜையை ஆரம்பிக்கும் போது
“வ்ரதோத்யாபன காலே யதோக்தபல சித்யர்த்தம்
விசேஷ பூஜாம் ஆசார்யமுகேன அஹம் அத்ய கரிஷ்யே ”
விரதபூர்த்தி காலத்தில் சாஸ்திரத்தில் கூறியபடி விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சித்திக்க வேண்டுமெனக் கருதி இந்தப் பூஜையைச் செய்கிறேன்.
விரதோத்யாபன காலத்தில் இவ்வாறு வீட்டில் பூஜைகள் செய்ய வசதியில்லாதவர்கள் ஆலயத்துக்குச் சென்று அபிஷேகம், பூஜை, அர்ச்சனை, உற்சவம் முதலியன செய்வித்தபின் அல்லது குறைந்த பட்சம் விரதோத்யாபனத்துக்குரிய சங்கல்பத்துடன் சஹஸ்ர நாமார்ச்சனையாவது செய்து விரதபலனைத் தருமாறு பிரார்த்தித்து விரத பூர்த்தி செய்யலாம்.

Wednesday, August 9, 2017

12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை

கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார்.
கடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு சிலரே வீடுபேறாகிய முக்தி வேண்டும் என்று கடவுளை உருகி, உருகி நினைப்பதுண்டு.
பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீபகாலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.

ஈசனின் மகனாகவும் புராணங்கள் இவரை குறிப்பிடுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து கோடானு கோடி மக்களை இவர் காத்து வருகிறார். இதற்காக இவருக்கு திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதனால்தான் “பைரவர் வழிபாடு கைமேல் பலன்” என்ற பழமொழி ஏற்பட்டது
பைரவா….” என்று மனதுக்குள் நினைத்த பாத்திரத்தில் அவர் நம்முன் வந்து நிற்பார். அவருக்கு நாம் பூஜை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். பைரவர் பற்றற்ற நிலையில் நிர்வாணமாக, நீல நிற உடலமைப்புடன் இருப்பவர்.
எனவே எல்லாரும் அவரைத் தொட்டு வணங்கக் கூடாது. அவர் பாதங்களில் பூக்களைப் போட்டு வழிபடலாம். பைரவர் மொத்தம் 64 வடிவங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த 64 வடிவங்களில் கால பைரவர் தனித்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார்.
கால பைரவருக்கு தனிக்கோவில் கட்டக் கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் சில தலங்களில் மட்டுமே கால பைரவ வழிபாடு உள்ளது.
அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்க உகந்த நாளாகும்.
பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.
பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 வீதம் ஜெபித்து பூஜிக்க வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், மது, மாமிசம் நிவேதனம் செய்ய வேண்டும்.
இது ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.
குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பைரவர் திருமேனியின் முன்னாள் மிளகை சிறுதுணியில் சிறுமூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.
வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது.
செழிக்கும். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.
அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
இவ்வளவு பெருமைகளையும் அருட்திறனும் கொண்டு விளங்கும் பைரவரை சிவாலயங்களிலும் தனி ஆலயங்களிலும் கண்டு வழிபடலாம்.

Tuesday, August 8, 2017

சிதம்பரம் நடராஜர் கோவில்

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம்
தரிசிக்க முக்தி தரும் தலம்
பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம்
ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம்
அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்
சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம்.


இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது.

 கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்கு கோபுரங்களில் 108 நடன பாவங்களையும் அறிவிக்கும் சிறபங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர்.

மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும், தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும், வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும், கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும் வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

தில்லை சிதம்பரத்தில் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருப்பெயர் மூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்). அர்த்தசாம வழிபாடு முடிந்தவுடன் எல்லா கோவில்களிலுமுள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால் இந்த பெயர் அமைந்தது.

திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி திருப்பெயர் உமையம்மை.
நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம் கனகசபையாகும். மற்றவை

1) திருவாலங்காடு – இரத்தினசபை,
2) மதுரை – வெள்ளிசபை,
3) திருநெல்வேலி – தாமிரசபை,
4) திருக்குற்றாலம் – சித்திரசபை.

இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை முறையே

சிற்சபை (சிற்றம்பலம்), 2) கனகசபை, 3) இராசசபை, 4) தேவசபை, 5) நிருத்தசபை ஆகியவையாகும்.

சிற்சபை (சிற்றம்பலம்) நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும். முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன் இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் “லெய்டன்” நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன.

கனகசபை (பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்துள்ளது. இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.

இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் “இடங்கழி நாயனார்” வரலாற்றில் கூறுகின்றார்.

தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர்.

நாம் தினம், 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

இராசசபை என்பது ஆயிரங்கால் மண்டபம். ஆண்டுதோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில் நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.
தேவசபை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விமானம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது.

நிருத்தசபை நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. ஊர்த்துவ பெருமானின் திருமேனி இங்கு உள்ளது.

மூன்றாம் பிரகாரத்தில் சிவகங்கை திருக்குளத்திற்கு மேற்கே அம்பிகை சிவகாமசுந்தரியின் சந்நிதி ஒரு தனிக்கோவிலாக பிரகாரத்துடன் அமைந்து விளங்குகிறது.

 கோவிலின் வடமேற்குத் திசையில் அம்பிகை சிவகாமசுந்தரி கோவிலை ஒட்டியும், வடக்கு கோபுரத்தை ஒட்டியும் முருகன் கோவில் அமைந்து விளங்குகிறது.

ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வயானை இருபக்கமும் நிற்க மயிலின் மீது எழுந்தருளி காட்சி தருகிறார். முருகனின் திரு உருவம் ஒரே கல்லினால் அமைந்ததாகும்.

சிதம்பர ரகசியம்: சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும்.

இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.

அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.

திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர்.

சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த பெரும் விழாக்களாகும்.

சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள் கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது.

 நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பி நின்றால் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியைக் காணலாம். இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின் சிறப்பாகும்.

Monday, August 7, 2017

சந்திர கிரகணம்


நிகழும் ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 22-ம் தேதி திங்கட்கிழமை (07-08-2017) சந்திர கிரகணம் இரவு 10.51 மணிக்கு ஆரம்பித்து, இரவு 12.49 மணிக்கு விடுகிறது.


சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

• பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

• சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

• சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

• கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.

சந்திர கிரகணம் பற்றி புராணக்கதை என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்….

சந்திரன் அவர் செய்த பாவம் காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார். ஆனால் சந்திரன், பகவானைப் பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது. இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.

கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் எனப் புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

கிரகணம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
• கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது.
• கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.
• ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
• செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.
• கிரகணத்தின் போது நவக்கிரக துதியைப் பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
• கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
• ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
• கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
• சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளைக் கொடுக்கும்.

Thursday, August 3, 2017

கன்னியாகுமரி, பகவதி அம்மன்

முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்துள்ள குமரிகண்டத்தில் 2000-ஆண்டுகள் பழைமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் உள்ளது. அம்மனின் 51-சக்தி பீடங்களில் இது குமரி பீடம் ஆகும். கடல் அருகே கோவில் இருந்தாலும் கிணற்றில் உள்ள நீர் உப்பு கரிப்பதில்லை என்பது அதிசியம். மூலவர் தேவி கன்னியாகுமரி, பகவதி அம்மன், உற்ச்சவர் தியாக சவுந்தரி, பாலசுந்தரி, தீர்த்தம் பாபநாசம்.காசிக்கு போகிரவர்களுக்கு கதி கிடைக்க கண்னியாகுமரிக்கு வரவேண்டும் என்கிறது புராணம். சிறந்த தீர்த்த உதுரை உடைய புண்ணிய கடல்கறை என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வேள்வியில் தோன்றி கன்னியாகுமரியில் தவம் புரிந்த அம்பாள்:

 அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். விண்ணவரை ஒட்டித் தூயோர்க்கும் முனிவருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள்.
 திருமால் தீத்திறங்கொண்ட பாணாசுரனைப் பரசக்தியால் மட்டுமே கொல்ல முடியும் ஆகவே தேவர்கள் பராசக்தியை அணுக வேண்டும் என்றார். அதன் படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒர் பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் சக்திதேவி வெளிப்பட்டுப் பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து, ஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள்.
  அன்று முதல் அவள் கன்னியா குமரிக்கு வந்து கடுந்தவம் புரிந்தாள் நாள் செல்ல செல்லக் கன்னிதேவி மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரம் என்னும் இடத்திலுள்ள இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார். அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
  ஆனால், அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவனால் விதிக்கப்பட்டிருந்தமையால், இத் திருமணம் நிகழுமாயின், பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு கெட்டுவிடும் என்று நாரதர் உணர்ந்தார். ஆகவே அவர் இத்திருமணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதினர்.
 அவர் பராசக்தியையும், சிவபெருமானையும் நேரில் சென்று கண்டு, திருமணம் குறிப்பிட்ட ஒர் நாளில், நள்ளிரவில், ஒரு நல்வேளையிலேயே நிகழ வேண்டும், அதற்கு ஆயத்தமாக இருங்கள் என கூறினார். அவ்வாறே சிவபெருமான் குறித்த இரவில், நல்லநேரம் தவறிவிடக் கூடாதெனக் கருதிக் கன்னியா குமரிக்குப் புறப்பட்டார். போகும் வழியில், வழுக்கம் பாறை என்ற இடத்தை அடைந்தபோது,

சேவல் உருவில் நாரதர்:

நாரதர் ஒர் சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவபெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தேவியும், அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து, தவத்தை தொடர்ந்தாள்.

உணவு பொருள் மணலாக மாறியது:

 திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவு பொருள்யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம். இவ்வாறு தேவி கடுந்தவமிருக்கும் போது, ஒரு நாள், பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால், தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். இத்தகைய தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில், தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றொழித்தாள். தேவர் யாவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தியருளியபின் மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள்.
நேர்த்தி கடனாக அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சார்த்துதல் அண்ணதானம் செய்தல், அபிஷேகம் ஆராதனை செய்தல் இங்கு நேர்த்திகடனாக பக்தர்கள் செய்கின்றனர்.

ஆடி மாதம் 18-ந் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா!!

ஆடி மாதம் 18-ந் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு.

 நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். இந்த விழா இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது ஐதீகம். ஆடி 18-ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.
 காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்து விடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும்.
 கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டது போல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
 அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.
 காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுகிறாள். இந்நாளில், சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும். இவ்வூருக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள்.
 சாதாரணமக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.
 ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், ‘அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்’ என்று கூறினார். அதன்படி ராமச்சந்திர மூர்த்தி, காவிரியில் நீராடி தன்னுடைய பாவங்களைப் போக்கிக் கொண்டார். அவர் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
 தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை, ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

Tuesday, July 18, 2017

ராகு கால வழிபாடு

ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.



சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலேயே, ராகுகாலத்தில் சுப காரியங்களை செய்வது தவிர்க்கப்படுகிறது. அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.

ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1½ மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும், அம்பிகையை "மங்கள சண்டிகையாக" வணங்குவதே காரணம்.

செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன் தரும். துர்க்கையை பார்த்தபடி தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.

வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகு காலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.

அதன்படி செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!